Saturday, May 12, 2012

உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாறப்போகிறது சென்னை சென்ட்ரல்


புதுடில்லி :"சென்னை சென்ட்ரல் உட்பட, 84 ரயில் நிலையங்கள், உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக, நடப்பு நிதியாண்டில் மாற்றப்படும்' என, ராஜ்யசபாவில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் பரத்சிங் சோலங்கி கூறினார்.
ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், அவர் கூறியதாவது:
தரம் உயர்வு:நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில், 266 ரயில் நிலையங்கள், 2011-12ம் ஆண்டில், கண்டறியப்பட்டு, அவற்றை உலகத் தரத்திற்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 73 ரயில் நிலையங்கள், ஆதர்ஷ் திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக நடப்பு நிதியாண்டில், 84 ரயில் நிலையங்கள், தரம் உயர்த்தப்பட உள்ளன. புதுடில்லி, மும்பை சத்ரபதி சிவாஜி முனையம், மும்பை மற்றும் பாட்னா ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான மாஸ்டர் பிளானும், சாத்தியக் கூறு அறிக்கைகளும் தயாராகியுள்ளன.
நிறுவனங்கள் தேர்வு:இதன் அடுத்த கட்டமாக, சென்னை சென்ட்ரல், செகந்திராபாத், ஆனந்த் விகார், சண்டிகார், பிஜ்வாசன், போர்பந்தர், சூரத், ஆமதாபாத், சீல்டா போன்ற ரயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளுக்காக ஆலோசனைகளை வழங்குவதற்காக, நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதர ரயில் நிலையங்களில், இதுதொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மண்டல ரயில்வேக்கள் மேற்கொண்டுள்ளன.
நகரும் படிக்கட்டு:பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் ரயில் நிலையங்களில், நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். தற்போது நூறு நகரும் படிக்கட்டுக்கள் அமைக்க ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 221 நகரும் படிக்கட்டுக்களை பல்வேறு ரயில் நிலையங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும், 50 நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். மீதமுள்ளவை அடுத்து வரும் ஆண்டுகளில் அமைக்கப்படும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More