Saturday, May 19, 2012

புதுக்கோட்டை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவு இல்லை- தி.மு.க. மேலிடம் முடிவு

சென்னை, மே. 19-

புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இந்த தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் நிறுத்தப்பட்டுள்ளார். தே. மு.தி.க. வேட்பாளராக ஜாகீர்உசேன் நிற்கிறார்.

தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடவில்லை. முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. - தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்து உள்ளது. இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சுயேட்சைகளும் களம் இறங்குகிறார்கள். சட்டசபை தேர்தலில் தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தது.

எனவே இந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. கேட்டால் தி.மு.க. ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க. நேரடியாக ஆதரவு கேட்காவிட்டால் தி.மு.க.வினர் ஓட்டுப் பதிவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேட்காமல் ஆதரித்தால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுத்ததாக ஆகிவிடும். எனவே தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்று புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறினார்.

தி.மு.க.வினர் யாருக்கும் ஓட்டுப் போடவில்லை என்பதை 49-ஓ படிவத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். அது தி.மு.க. தலைமையின் கருத்து அல்ல எனது சொந்த கருத்து என்று அவர் கூறியுள்ளார்.

49-ஓ படிவத்தில் குறைவாக ஓட்டு பதிவானால் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. செல்வாக்கே இவ்வளவுதான் என்று அரசியல் மேடையில் விமர்சனம் எழும். எனவே ஓட்டுப்பதிவை தி.மு.க. புறக்கணிக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து கட்சி மேலிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More