ஈரோடு: டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச ஆன்-லைன் வசதியை தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பயன்படுத்தும்படி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் ஆன்-லைனில் பதிவு செய்யவும், விண்ணப்பம் செய்யவும் அறிவிக்கப்பட்ட சேவை மையம், ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களின் நலனை கருதி, தொகுதி-4 பதவியை பொறுத்த வரை, விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் விபரங்களையும் நிரந்தரப் பதிவுக்கு மாற்ற தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
பதிவு செய்யும் போது கிடைத்துள்ள பதிவு எண், பாஸ்வேர்ட் ஆகியவை, நிரந்தரப் பதிவுக்கான அடையாள எண், பாஸ்வேர்ட் ஆக ஏற்றுக்கொள்ளப்படும். இது ஐந்து ஆண்டுக்கு செல்லத்தக்கது.
நிரந்தரப்பதிவு முறையில் மட்டும் பதிவு செய்தவர்கள், தொகுதி-4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தனியே விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தரப்பதிவு முறையில் விண்ணப்பதாரர்களின் அடிப்படை விபரங்கள் மற்றும் புகைப்படம், கையொப்பம் ஆகியவை மட்டுமே பெறப்படுகின்றன. குறிப்பிட்ட தேர்வுக்கு உரிய கல்வித்தகுதி, தொழில்நுட்பக் கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி முன் அனுபவம், தேர்வு மையம் ஆகியவை ஒவ்வொரு தேர்வுக்கும் மாறுபடும். மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். நிரந்தரப்பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்பட மாட்டாது. நிரந்தரப் பதிவெண்ணைக் கொண்டு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் தேர்வாணையத்தின் சார்பில், ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய போஸ்ட் ஆஃபீஸ்கள், இந்தியன் வங்கி கிளைகள், தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவச இணைய வழி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இச்சேவை முற்றிலும் இலவசம்.
0 comments:
Post a Comment