Thursday, May 24, 2012

மாநிலங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல் விலை குறைந்து விடும்: மத்திய அரசு யோசனை

புதுடெல்லி, மே. 24-
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசு அதற்கு பரிகாரம் காணும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.  
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அபரிதமான சுமையை குறைக்க மத்திய அரசு உண்மையிலேயே விரும்பினால், மத்திய அரசு தனக்குரிய வரியை குறைக்கலாம். ஆனால் தனக்கு வருமானம் குறைந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
எனவே மாநிலங்களிடம் வரியை குறையுங்கள் என்று மத்திய அரசு கூறத்தொடங்கி உள்ளது. டெல்லி, அரியானா, மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம், மிசோரம், ஆந்திரா, மேகாலயா, அசாம் ஆகிய 10 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த 10 மாநில முதல்- மந்திரிகளிடம் வரியை குறைக்கும்படி மேலிடத் தலைவர்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. இதை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஏற்கும் என்று கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் முதல்-மாநிலமாக வரியை குறைத்துள்ளது.   மேற்கு வங்கம், மராட்டியம், கேரளா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்கள் மத்திய அரசின் யோசனையை ஏற்பார்களா? என்று தெரியவில்லை. மற்ற மாநில முதல்வர்கள் பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைப்பார்களா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More