வள்ளியூர், மே 8: அணுஉலையை எதிர்த்து இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் மக்களிடமிருந்து செவ்வாய்க்கிழமை 24,000 வாக்காளர் அடையாள அட்டைகள் சேகரிக்கப்பட்டன. இவை புதன்கிழமை ராதாபுரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் மக்களிடம் அரசு அதிகாரிகள் எந்தவித பேச்சு வார்த்தைக்கும் வராததையடுத்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திரும்ப ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன்படி இடிந்தகரை, தோமையார்புரம், பெருமணல், கூடுதாழை, கூடங்குளம், வைராவிக்கிணறு, கூத்தங்குழி, கூட்டப்பனை, ஆவுடையாள்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதுவரை 24,000 வாக்காளர் அடையாள அட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயன் தெரிவித்தார். இது தவிர அணுஉலை வேண்டாம் என திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். கையெழுத்திடப்பட்ட நோட்டுகளையும் கிராம மக்கள் போராட்டக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். கிராம மக்கள் நோட்டில் போடப்பட்டுள்ள கையெழுத்தின் அருகே தங்களது குடும்பஅட்டையின் எண்ணையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த கையெழுத்து நோட்டை நீதிமன்றங்களில் நீதிபதிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். மதிப்புமிக்க இந்தியா இயக்கம் தொடக்கம்: இந்த நிலையில் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மதிப்புமிக்க இந்தியா என்ற இயக்கத்தை இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இந்த இயக்கத்தைத் தொடங்கிவைத்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: கூடங்குளம் அணு உலை வேண்டாம் என அணுஉலை அமைத்திருக்கின்ற பகுதி மக்களும், பிற பகுதியில் இருக்கும் மக்களும் ஒருமித்த குரல் கொடுத்துவரும் நிலையில், ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துகள் ஏற்கப்படவில்லை. எனவே, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம். இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் 7 இடங்களில் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றார்.
0 comments:
Post a Comment