இலங்கை அதிபர் ராஜபட்சவுக்குப் பின்னடைவு
கொழும்பு, மே 8: போர்க் குற்ற மீறலுக்காக சர்வதேச சமூகம் தன்னைக் கண்டிப்பதற்கு முன்னால், 3 மாகாணங்களின் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தி தன்னுடைய அரசியல் செல்வாக்கை நிரூபித்துவிடலாம் என்று திட்டமிட்ட இலங்கை அதிபர் ராஜபட்சவின் அரசியல் வியூகத்துக்கு அணை போட்டுவிட்டது வட மத்திய மாகாண உயர் நீதிமன்றம். மாகாண சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னால் அதைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக்கூடாது என்று வட மத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துள கருணரத்ன தடை விதித்துவிட்டார். இலங்கை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மாகாண சட்டப் பேரவை உறுப்பினர் அனில் ரத்னாயக தாக்கல் செய்த மனு மீது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். வட மத்திய மாகாணத்தின் பதவிக்காலம் 2013 செப்டம்பர் 17-ம் தேதிதான் முடிகிறது என்றாலும் அரசியல் உள்நோக்கத்துடன் அதை உரிய காலத்துக்கு முன்னதாகவே கலைத்துவிட அதிபர் திட்டமிட்டு வருகிறார் என்று ரத்னாயக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் 3 மாகாண சட்டப் பேரவைகளைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாமா என்று வடக்கு மத்திய, சபரகமுவ, கிழக்கு மாகாண முதலமைச்சர்களுடன் அதிபர் ராஜபட்ச ஆலோசனை செய்துகொண்டிருந்த நேரத்திலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. வடக்கு மத்திய, சபரகமுவ மாகாணக் கவுன்சில்களின் பதவிக்காலம் 2013 ஆகஸ்ட் - செப்டம்பர் மாத காலத்தில்தான் முடிகிறது. கிழக்கு மாகாணக் கவுன்சிலின் பதவிக்காலம் 2013 மே மாதம் முடிகிறது. காரணம் என்ன? இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரை வெற்றிகரமாக முடித்துவிட்டார் என்ற எண்ணம் சிங்களர்களிடையே இன்னமும் நீடிப்பதால் ராஜபட்சவை சக்திவாய்ந்த தலைவராக அவர்கள் கருதுகின்றனர். இந்த நினைப்பு இருக்கும்வரை அரசியல் செல்வாக்கும் இருக்கும் என்பதால், பொருளாதாரப் பிரச்னைகளால் செல்வாக்கு சரியும் முன்னால் தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று ராஜபட்ச கருதுகிறார். அத்துடன் சர்வதேச அரங்கில் போர்க்குற்றச் செயல்களுக்காக தன்னைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ சர்வதேசச் சமூகம் முயன்றால் சிங்களர், தமிழர், தமிழ் முஸ்லிம்களின் பகுதிகளிலும் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள இந்தத் தேர்தல் முடிவுகள் உதவும் என்று கணித்தார். வடக்கு மத்திய மாகாணத்திலும் சபரகமுவ மாகாணத்திலும் சிங்களர்கள்தான் பெரும்பான்மைச் சமூகத்தவராக இருக்கின்றனர். இலங்கையின் கிழக்கில் தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் கணிசமாக இருக்கின்றனர். அங்கு தேர்தல் எப்படி நடந்தாலும் தேர்தல் முடிவுகள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் தன்னை அரசியல் செல்வாக்கு உள்ளவராகக் காட்டிக்கொள்ள இந்தத் தேர்தல்கள் உதவும் என்று ராஜபட்ச திட்டமிட்டுச் செயல்படுகிறார். போர்க்குற்றச் செயல்கள், போருக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், இன ஒடுக்கல் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் முன்பு வரும் அக்டோபர், நவம்பரில் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்குள் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொண்டால் சர்வதேசச் சமூகம் தன்னைக் கண்டிக்கத் தயங்கும் என்று ராஜபட்ச கருதுகிறார்.
0 comments:
Post a Comment