ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை எந்த ஜனாதிபதியும் மேற்கொள்ளாத அளவுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் தேவையா? என்று நாடெங்கும் பேசப்படுகிறது. இதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடம், ஜனாதிபதி ஏன் வெளிநாடு செல்லவேண்டும்? அத்தகைய பயணங்களால் என்ன நன்மை கிடைக்கிறது? ஜனாதிபதி அவசியம் வெளிநாடு செல்ல வேண்டுமா? என்றெல்லாம் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஜனாதிபதி பிரதீபாபட்டீல் கூறியதாவது:-
நான் எம்.எல்.ஏ., மந்திரி, கவர்னர் என்று அரசியலில் பல பதவிகள் வகித்தவள். எனவே அரசு நடைமுறைகள் பற்றி ஏற்கனவே எனக்கு நன்கு தெரியும். நான் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை. சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை உயர்த்தும் வகையில் என் வெளிநாட்டு பயணங்கள் அமைந்தன.
அரசியல், பொருளாதார ரீதியாக நட்புறவையும், மேம்பாட்டையும் எனது வெளிநாட்டு பயணங்கள் தந்துள்ளன. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் தொழில் அதிபர்கள் குழுவை அழைத்து சென்றேன். இதன் மூலம் நமக்கு நிறைய முதலீட்டு வாய்ப்புகள் கிடைத்தன.
தொழில் அதிபர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த வாய்ப்பு கிடைத்தது. பல நாடுகளில் என் முன்னிலையில் தொழில் அதிபர்கள் ஒப்பந்தங்கள் செய்தனர். நான் முதலில் லத்தீன் அமெரிக்கா சென்றபோது என்னுடன் 18 தொழில் அதிபர்கள் வந்தனர். நாளடைவில் இந்த எண்ணிக்கை உயர்ந்தது.
சமீபத்தில் நான் தென்ஆப்பிரிக்கா சென்றபோது 60 தொழில் அதிபர்கள் என்னுடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள நிலை பற்றி அறிந்தனர். அங்கு தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்தனர்.
இந்தியாவுக்கும், வெளி நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு ஏற்படவும் என் வெளிநாட்டு பயணங்கள் கைகொடுத்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா பலம்பெற எனது வெளிநாட்டு பயணங்கள் உதவின.
இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். நமக்கு உலகின் பல்வேறு நாடுகளின் ஆதரவு தேவை. அந்த வகையில் எனது வெளிநாட்டு பயணங்கள் ஆக்கப்பூர்வமாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறின. எனது வெளிநாட்டு பயணத்தால்தான் சுவிட்சர்லாந்து, மொரிஷியஸ் உள்பட பல நாடுகள் இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்பு கொள்கையை கைவிட்டன.
இப்படி பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம். உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமானால் இந்திய ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்று வருவது அவசியம். வெளிநாட்டு கொள்கைகளுக்கு ஏற்ப இந்த பயணம் அவசியமாகும்.
ஸ்பெயின், தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி சென்றதே இல்லை. அந்த குறையை நான் நிவர்த்தி செய்தேன். கம்போடியா நாட்டுக்கு 50 ஆண்டுக்கு பிறகு சென்ற இந்திய ஜனாதிபதி நான்தான். எனவே இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பட்டீல் கூறினார்.
0 comments:
Post a Comment