Tuesday, May 8, 2012

தனியார் பள்ளிகளில் 15% கூடுதல் கட்டணம்: இணையதளத்தில் பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு தனித்தனியே கட்டணம் நிர்ணயித்து உத்தரவிட்டது. இந்த கட்டணத்தை எதிர்த்து 384 தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் ’நீதிபதி கே.ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கட்டணங்களை எதிர்த்து 2.5.2012-க்குள் வழக்கு தொடர்ந்த பள்ளிகள் மட்டும் 2012-2013-ம் கல்வி ஆண்டுக்கு மட்டும் இடைக்கால ஏற்பாடாக அந்த குழு நிர்ணயித்த கட்டணத்துடன் 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதைத்தொடர்ந்து, கட்டணத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணம் மற்றும் உயர் நீதிமன்றம் நிர்ணயித்த 15 சதவீத கூடுதல் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை மீறி செயல்படும் பள்ளிகள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த நிலையில், கூடுதல் 15 சதவீத கட்டணம் வசூலிக்கும் 384 பள்ளிகளின் பட்டியல் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
 
இதுதொடர்பாக மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி நேற்று வெளியிட்ட அறிக்கையில், `கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணங்களை எதிர்த்து சில தனியார் பள்ளிகளால் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெறப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் பொதுமக்கள், பெற்றோர் நலன் கருதி இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More