புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க.,- ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை துவக்கியுள்ளதாலும், தே.மு.தி.க., போட்டியிடுகிறது என்ற அறிவிப்பாலும், தொகுதியில் இடைத்தேர்தல் களைகட்ட துவங்கியுள்ளது. புதுக்கோட்டை தொகுதி, இ.கம்யூ., எம்.எல்.ஏ., முத்துக்குமரன், ஒரு மாதத்துக்கு முன் சாலை விபத்தில் இறந்ததால், ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க.,- ம.தி.மு.க.,- இந்திய கம்யூனிஸ்ட்,- பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள், இடைத்தேர்தலை புறக்கணித்து விட்ட நிலையில், அ.தி.மு.க.,வும்,- ஐ.ஜே.கே.,வும் வேட்பாளர்களை அறிவித்தன.
போட்டி : தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்திக் தொண்டைமான், 15 நாட்களாக தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார். ஐ.ஜே.கே.,வோ (இந்திய ஜனநாயகக்கட்சி) மூன்று நாட்களுக்கு முன்தான் வேட்பாளராக சீனிவாசனை அறிவித்தது.
இதனால் தொகுதியில், எந்த கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடாததால், தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதுக்கான அறிகுறியே இல்லாமல் இருந்து வந்தது. அரசு இயந்திரம் மட்டும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நேற்று முன்தினம் காலை முதல், ஐ.ஜே.கே., வேட்பாளர் சீனிவாசன், தனது தீவிர பிரசாரத்தை துவக்கினார். அ.தி.மு.க., வேட்பாளர் ஏற்கனவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது என்று, அக்கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இதனால், இடைத்தேர்தல் பரபரப்பின்றி இருந்த புதுக்கோட்டை தொகுதி, நேற்று முதல் களைகட்ட துவங்கியுள்ளது.
தே.மு.தி.க.,வுக்கு தி.மு.க., ஆதரவு கிடைக்குமா? : தே.மு.தி.க.,வால் அறிவிக்கப்படும் வேட்பாளர், பொது வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்று, பரவலாக பேசப்படுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று, நேற்று முன்தினம், புதுக்கோட்டையில் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, "புதுக்கோட்டை நகராட்சி பகுதியில், தி.மு.க.,வுக்கு, 60 ஆயிரம் ஓட்டு உள்ளது. தி.மு.க., புறக்கணித்து விட்டதால் தேர்தலில், தி.மு.க.,வினர் ஓட்டு போடாமல் இருக்கக் கூடாது. மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போடாவிட்டாலும், தி.மு.க.,வினர், "49ஓ'வை பயன்படுத்தி, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்,'' என்று பேசினார். முக்கிய எதிர்க்கட்சியான, தி.மு.க., போட்டியிடாத நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டுகளை அள்ளிவிடலாம் என்ற நினைப்பில் களமிறங்கும், தே.மு.தி.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற சூழலே உள்ளது.
290 "லேப்-டாப்' தயார் : தேர்தலை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று, கலெக்டர் கலையரசி தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இடைத்தேர்தல், 224 ஓட்டுப்பதிவு மையங்களில் நடக்கிறது. ஒவ்வொரு ஓட்டுப்பதிவு மையத்திலும் முறைகேடுகளை தடுக்கவும், சமூக விரோதிகளை அடையாளம் காணவும், வெப்கேமரா அமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. வெப்கேமரா வைத்தால், அதை கட்டுப்படுத்த, நிகழ்வுகளை பதிவு செய்ய லேப்-டாப்பும், ஒவ்வொரு ஓட்டுப்பதிவு மையத்திலும் அமைக்க வேண்டும். தற்போது, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் அலுவலகத்தில், 290 லேப்-டாப்புகள் சேகரித்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
400 ரூபாய் சம்பளம்: தேர்தலின் போது பயன்படுத்தப்படும் லேப்-டாப்களை கையாள கல்லூரி மாணவ, மாணவியர் பயன்படுத்தப்பட உள்ளனர். இதற்காக மாணவருக்கு, 400 ரூபாய் ஊதியம் தர தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment