Saturday, May 19, 2012

நீதிமன்ற உத்தரவுப்படி கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், போலீசார் என்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார்.

சென்னை : நீதிமன்ற உத்தரவுப்படி கார்களில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், போலீசார் என்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா எச்சரித்துள்ளார். கார்களில் முன்புறம், பின்புற கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் பலர் கருப்பு பிலிம் ஒட்டுகின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், உள்ளே இருப்பவர்களை வெளியில் இருந்து பார்க்க முடியாதபடியும் கருப்பு பிலிம்களை ஒட்டுகின்றனர். இதை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கடத்தல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு தப்பி செல்கின்றனர். இதுதொடர்பான வழக்கில், கார்களில் கருப்பு பிலிம் ஒட்ட சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. காரின் முன், பின் பக்க கண்ணாடிகள் 70 சதவீத ஊடுருவு திறன், ஜன்னல் கண்ணாடி 50 சதவீத ஊடுருவு திறனுடன் இருக்க வேண்டும். கூலிங் என்ற பெயரில் இதைவிட அதிக கருமையான பிலிம்களை ஒட்டுவது தவறு என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இந்த உத்தரவு முதலில் அமல்படுத்தப்பட்டது. பெங்களூரில் கார்களில் கருப்பு பிலிம் அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் அமல்படுத்தப்பட்டது.

முதல் 2 நாட்கள் கார் டிரைவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. கார்களில் ஒட்டியிருக்கும் பிலிம்களை அகற்றும்படி டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பின் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்தனர். எனினும், பலர் கருப்பு பிலிம்களை  அகற்றவில்லை. போலீஸ் வாகனங்களும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறுகையில், கார்களில் கருப்பு நிற பிலிம்களை மாற்றாத வாகன ஓட்டிகளுக்கு முதலில் ரூ.100, பின்னர் ரூ.300 அபராதமாக விதிக்கப்படும். தொடர்ந்து கருப்பு பிலிம்களுடன் கார் ஓட்டினால் அவர்கள் மீது வேறு நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளித்தால், காருக்குள் நடக்கும் சமூகவிரோத செயல்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும். போலீசாரும், உயர் அதிகாரிகளும் தங்களது காரில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பிலிம்களை கட்டாயம் அகற்ற வேண்டும். இல்லை என்றால் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More