Saturday, May 12, 2012

காதுள்ளவன் கேட்கக் கடவன்!

திருத்தேர்களில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் மரணமடைவதும், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மின் நிலையம் மூடப்படும் நிலை ஏற்படுவதும் சாதாரண விபத்துகள் என்று கருத முடியவில்லை. இந்தச் சம்பவங்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம்தான்.  தேர்த் திருவிழா நடைபெறும்போது, மின்வாரியத்தின் மூத்த பொறியாளர் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் குழு ஒன்று, கோயிலை விட்டுத் தேர் புறப்பட்டு, மீண்டும் நிலைக்குத் திரும்பும் வரை உடன் இருக்கும். தேர் போகும் பாதைகளில் மின்தடை ஏற்படுத்தப்படும். சாலையில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மின்இணைப்புக் கம்பிகளை ஊழியர்கள் கழற்றி வைத்து, தேர் புறப்பட்டுச் சென்றதும் மீண்டும் அந்தக் கம்பிகளைப் பொருத்துவார்கள். ஒவ்வொரு வீதியாகத் தேர் கடந்து செல்லச் செல்ல, கடந்து சென்ற பாதைகளில் மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படும். இந்தச் சேவைக்காக அந்தக் குழுவுக்குத் தனியாகச் சிறப்புத் தரிசனமும், சிறப்பு மரியாதைகளும் அந்தந்தக் கோயில்களில் உண்டு.  மேலே குறிப்பிட்ட நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீகருப்புலீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவில் உயர்மின்அழுத்தக் கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் இறந்திருக்க மாட்டார்கள். விருதுநகர் சென்னங்குடி வெங்கடாசலபதி கோயில் பல்லக்குக் குடைக்கம்பி மின்சாரக் கம்பியில் உரசியபோது 3 இளைஞர்கள் இறந்திருக்க நேரிட்டிருக்காது. அதனால், இந்தச் சம்பவங்கள் மின்வாரியத்தின் மெத்தனப் போக்கு மற்றும் அலட்சியத்தால் நேர்ந்தவைதானே தவிர விபத்து என்று ஒதுக்கிவிட முடியாது.  ஸ்ரீகருப்புலீஸ்வரர் கோயில் தேர் 56 அடி உயரம் கொண்டது. அத்தகைய தேர் வீதிவலம் வரும்போது, தேர் வரும் பாதையில் மின்சார விநியோகம் தொடர்கிறது என்றால், அதற்கு முழுப் பொறுப்பு மின்வாரிய அதிகாரிகள்தான். மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் அறிவித்ததே தவிர, இந்த மரணத்துக்கு அடிப்படைக் காரணமான மின் ஊழியர்கள் யாரையும் பொறுப்பாக்கவும் இல்லை. நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.  தேருக்கு இந்த நிலைமை என்றால், பல்லக்குக் குடை மின் கம்பியில் உரசி, 3 பேரின் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த அளவுக்கு தாழச் சென்ற மின்கம்பிகளுக்குக் காரணமானவர்கள் யார்? அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் இல்லை.  ஓர் அரசு விழாவுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்படும்போது, பந்தல் தீப்பிடித்தால் அணைப்பதற்காக ஒரு தீயணைப்பு வாகனம் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். மின்கம்பிகளில் மின்கசிவு ஏற்பட்டால் அதைச் சரி செய்யவும், விழா மேடைக்கு வரும் மின்அளவைச் சரி பார்த்து, தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் ஒரு பொறியாளர் தலைமையில் ஒரு குழு நிறுத்தப்பட்டிருக்கும். தேவைப்பட்டால், ஒரு தாற்காலிக மின்மாற்றியும் நிறுவப்படுகிறது. இவை அனைத்தும் நிகழ்ச்சிக்கு வரும் பிரமுகர்களுக்காக அல்ல. அங்கே கூடும் ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்புக்காகத்தான். அதே கடமை உணர்வுடன் தேர்த் திருவிழாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு குறித்தும் மின்வாரியம் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டாமா?  மின்துறையின் பொறுப்பின்மையின் உச்சகட்டமாக மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு, தமிழக அரசுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மின்நிலையம் மூடப்படும் நிலைமை உருவானதால், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இரட்டைச் செலவு.  அனல்மின் நிலையத்துக்குத் தேவையான எரிபொருளான நிலக்கரியைக் கொண்டு செல்லும் "கன்வேயர் பெல்ட்' தீப்பிடித்து எரிந்ததுதான், மேட்டூர் அனல் மின்நிலையம் முற்றிலுமாகச் சேதம் அடைந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஓர் அனல் மின்நிலையத்தில், நிலக்கரியைத் தாங்கிச் செல்லும் "கன்வேயர் பெல்ட்' எளிதில் தீப்பற்றக்கூடிய வகையைச் சேர்ந்தது அல்ல. அப்படிப்பட்ட "கன்வேயர் பெல்ட்'டைப் பயன்படுத்த மாட்டார்கள்.  மேலும், அன்றைய தினம் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி என்றும், இவற்றின் எரிதிறன் அதிகம் என்பதாலும், நிலக்கரி வெயிலில் காய்ந்து, ஒன்றோடொன்று உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் காரணம் கண்டுபிடிப்பதைப் போன்ற அபத்தம் வேறு ஏதும் இல்லை. இந்த நிலக்கரி எரிதிறன் அதிகமும் சாம்பல் குறைவும் உள்ள ரகம் என்பதால் இவை உடனே தீப்பற்றக்கூடியவை என்று சொல்லப்படும் வாதத்தை, உண்மை அறிந்தவர்கள் யாரும் நம்ப மாட்டார்கள். இந்த நிலக்கரி அப்படியொன்றும் சாணத்துக்குள் வைத்து ஓலைக் குடிசைகளின் கூரையில் வீசப்படும் "பாஸ்பரஸ்' அல்ல, காய்ந்தவுடன் எரிவதற்கு; கந்தக உருண்டைகளும் அல்ல, உரசியதும் தீப்பற்றிக்கொள்ள! ஆனாலும் இத்தகைய புனைச்சுருட்டுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, உண்மையை மறைக்கப் பார்க்கிறது மின்வாரியம்.  அவர்கள் சொல்வதைப்போன்றே, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி வெயிலில் காய்ந்து சிறு உராய்வில் தீப்பற்றும் தன்மை கொண்டவை என்றால், அந்த நிலக்கரி வெயிலில் காயாதபடி சிறப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டாமா? பாதுகாப்பாக நிலக்கரியைக் கையாளாதது யார் குற்றம்? பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகக் காரணமான அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?  திருத்தேர் செல்லும் பாதைகளில் மின்சாரம் இருப்பதும், மேட்டூர் அனல் மின்நிலையம் திடீரென்று எரிவதும் வெறும் விபத்து என்று தட்டிக் கழிப்பதற்கில்லை. ஒன்று, மின்வாரியத்தின் மெத்தனம், அலட்சியம், பொறுப்பின்மை காரணமாக இருக்க முடியும் அல்லது, மின்வாரிய ஊழியர் அமைப்புகளுக்குள், அல்லது அவர்களை வைத்து நடைபெறும் மின்அரசியலாகவும் இருக்கக்கூடும்.  காதுள்ளவன் கேட்கக் கடவன்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More