Tuesday, May 15, 2012

தமிழகத்திற்குப் புகழ் சேர்க்கும் ராணுவப் பயிற்சிப் பள்ளி!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளி என்றழைக்கப்படும் ராணுவ பயிற்சி பள்ளி அகில இந்திய அளவில் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் பள்ளியாக விளங்கி வருகிறது. 

வசதியானவர்கள் மட்டுமே ராணுவத்தில் உயர் அதிகாரிகளாக ஆக முடியும் என்கிற நிலைமையை மாற்றி சாமான்ய மாணவர்களும் உயர் அதிகாரிகளாகும் வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு 1969-ம் ஆண்டு அப்போதையை ராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் முயற்சியால் இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் தற்போது 29 சைனிக் பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. இதில் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி 1969-ல் துவங்கப்பட்டதாகும். தற்போது 50 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில் பொன் விழா ஆண்டுக் கொண்டாட்டத்திற்கு இந்தப் பள்ளி தயாராகி வருகிறது. 1969-ம் ஆண்டு வெறும் 98 மாணவர்களுடன் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 650 மாணவர்கள் படித்து வருகின்றனர்.6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் படித்து வரும் இப்பள்ளி மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடுதல் பயிற்சிகள், குதிரையேற்றப் பயிற்சிகள், மலையேற்றப் பயிற்சிகள், பாராசூட் பயிற்சி, கப்பல், விமானம் மாதிரிகளை அமைக்கும் பயிற்சிகள் இது போக கராத்தே, நீச்சல், தடகளப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.சைனிக் பள்ளி நிர்வாகம், 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் ர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இது தவிர, உடல் தகுதித் தேர்வும் நடத்தப்படுகிறது. விடுதியிலேயே தங்கிப் பயிலும் இந்த மாணவர்களுக்கு என்டிஏ (நேஷனல் டிபென்ஸ் அகாடமி) தேர்வும் நடத்தப்படுகிறது.கேன் டூ இட் (Can do it) எதையும் செய்து முடி என்ற தாரக மந்திரத்துடன் பயின்று வரும் இப்பள்ளி மாணவர்களுக்கு ராணுவக் கட்டுப்பாடுகளுடன் கல்வி கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களில் ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றியுள்ளனர். பலர் அரசு உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, தேசிய அகாடமிக்கு அதிக அளவிலான மாணவர்கள் இந்தப் பள்ளியிலிருந்து ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.பள்ளி முதல்வராக கேப்டன் சந்தீப் சக்ரவர்த்தி பணியாற்றி வருகிறார். பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:04252-256246, 04252-256296. மேலும் விபரங்களுக்கு www.sainikschoolamaravathinagar.edu.in என்ற வெப்சைட் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More