Wednesday, June 27, 2012

Pranab Mukherjee's last day as Finance Minister-பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற சற்றே இறுக்கமான நாளாக

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை...

நிதியமைச்சராக 3 முறை இருந்தவர் பிரணாப் முகர்ஜி. 1977ம் ஆண்டு அவர் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது அவரது அமைச்சர் பதவியும் போனது. பின்னர் 1984ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். அதன் பின்னர் 28 ஆண்டுகள் கழித்து மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார் பிரணாப்.

நேற்று மாலை 4.30 மணியளவில் கடைசி முறையாக நார்த் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்தை விட்டு வெளியேறினார் பிரணாப். இனிமேல் அவர் நார்த் பிளாக்குக்கு வர மாட்டார் என்ற நினைவே அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது. அதை செய்தியாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார் பிரணாப்.

செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி உணர்ச்சி பொங்க பேசியதிலிருந்து சில பகுதிகள்...

உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். ஆனால் ஒரு அமைச்சராக கடைசி நாளில் நான் இங்கு நிற்கிறேன்.எனவே நிறைய பேச முடியாது, நேரமில்லை.

நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் இந்த தருணத்தில், நெஞ்சம் நிறைந்த, மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இங்கிருந்து செல்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் பதவி வகித்த இந்த காலத்தில் நான் எடுத்த அத்தனை முடிவுகளுமே சரியானதுதான் என்று கூற மாட்டேன். அதேசமயம், நான் எந்த முடிவை எடுத்தாலும், அதை நான் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருக்கும் ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை மனதில் கொண்டுதான் எடுத்தேன்.

எனது வாழ்க்கையில், நான் நீண்ட தூரம் வந்து விட்டேன். இருந்தாலும், எந்த உயரத்திற்குப் போனாலும், மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை. எனக்கு நானே அதை அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.

எனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, சிபிஎம், பார்வர்ட் பிளாக் என அத்தனை கட்சிகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் பிரணாப்.

இத்தனை ஆண்டு கால அரசியல்வாழ்க்கையில் பத்திரிக்கையாளர்கள் உங்களிடம் பழகிய விதம், அவர்களுடனான உங்களது அனுபவம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, தனது பாணியில், இனிமேல் காரில் ஏறப் போகும்போது வழிமறித்து கேள்வி கேட்பது, அமைச்சகத்திலிருந்து வெளியே வரும்போது கேள்வி கேட்பது ஆகியவை இருக்காது... என்றார் சிரித்தபடி.

நேற்று தனது கடைசி அரசியல் நாள் என்பதால் காலையிலேயே எழுந்து வழக்கமான பூஜையை முடித்து விட்டு அலுவலகத்திற்கு வந்தார் பிரணாப். கடைசி நாளிலும் அவர் சில கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டார். பின்னர் தனது துறை அதிகாரிகளைச் சந்தித்தார். அனைவருக்கும் குட்பை சொன்னார். பின்னர் அலுவலகத்திலேயே, வழக்கமான தனது பிற்பகல் தூக்கத்தை போட்டார். அதன் பிறகு மாலை 4.30 மணியளவில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

அங்கு லைனாக நின்றிருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் கடைசி முறையாக வணக்கம் சொல்லி விடை பெற்றார். பின்னர் பத்திரிக்கையாளர்களும் பிரணாப்பிடம் சென்று விடை பெற்றனர். அப்போது பல பத்திரிக்கையாளர்கள் தங்களது செல்போன் கேமராக்களில் பிரணாப் முகர்ஜியை வளைத்து வளைத்துப் படம் பிடித்தனர். அதைப் பார்த்த பிரணாப், இப்போதெல்லாம் படம் எடுக்கிறது ரொம்ப ஈசியாப் போச்சுல்ல என்றார் சிரித்த்படி.

நேற்றைய நாளில் ஒரு முக்கிய விஐபி திடீரென பிரணாப்பை சந்திக்க வந்தார். அவர் ராகுல் காந்தி. பிற்பகல் 1.30 மணியளவில் வந்த ராகுல், 3.30 மணி வரை பிரணாப்புடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராகுல் காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் தான் இணைந்து பணியாற்றிய அந்தக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாராம் பிரணாப்.

எப்போதும் டென்ஷனாகவே காணப்படும் பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் சற்றே இறுக்கமான நாளாக மாறி விட்டது. கடைசி முறையாக அரசியலிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற நேற்றைய நாளை மிகவும் உணர்ச்சிகரமாக முடித்து புதிய அத்தியாயத்தை நாளை தொடங்கப் போகிறார் பிரணாப் முகர்ஜி.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More