Saturday, June 23, 2012

Montek Singh Ahluwalia justifies toilets upgrade for Rs 35 lakh-கடனும் கழிப்பறையும்

கடனும் கழிப்பறையும்!

'என் தற்கொலைக்குக் காரணம், கரும்பு விவசாயத்துக்காக நான் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடன்தான்'
-இப்படி முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரும்பு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, உயிரை விட்டிருக்கிறார்... நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி முருகையன்!
தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு, சமீபத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, உரிய காலத்தில் கரும்புகள் அறுவடை செய்யப்படாததால்... காய்ந்து வீணாகிப் போயின. 'அறுவடை செய்து கடனைக் கட்டலாம்' என்று காத்திருந்த விவசாயிகள், இதன் காரணமாக கடனாளிகளாக மாறிப் போனார்கள். அவர்களில் ஒருவர்தான், இந்த முருகையன்!
கரும்பு விவசாயிதான் என்றில்லை... 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் விவசாயக் கடனைக்கூட கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நெல் விவசாயி, கோதுமை விவசாயி... என்று தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்தபடிதான் இருக்கிறது.
இப்படிப்பட்ட நாட்டில்தான்... டெல்லியில் உள்ள திட்டகமிஷன் தலைமை அலுவலகத்தில்
2 கழிப்பறைகளை 35 லட்ச ரூபாய் செலவில் சீரமைத்திருக்கிறார்கள். 'இதற்காக இவ்வளவு செலவிட வேண்டுமா?' என்று கேள்வி எழ, அதை நியாயப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார் திட்டக் கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.
கழிப்பறைக்கு இப்படி வாரி இறைக்கும் லட்சங்களை வைத்தே... எத்தனையோ விவசாயிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியுமே! ஒருவேளை, 'இந்தியா விவசாய நாடு' என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க... 'தற்கொலைகள் தொடரட்டும்' என்று முடிவெடுத்து விட்டார்களோ... ஆட்சியாளர்கள்!
வாழ்க்கை முழுக்க ரத்தம் சிந்தும் விவசாயி, துளி சுகமும் காணாமல் அந்த மண்ணுக்குள்ளேயே போய் கொண்டிருக்க... துளி அழுக்கோ, சிறு வியர்வைக் கசகசப்போ தாங்கள் புழங்கும் கழிப்பறைக்குள்கூட வந்துவிடக் கூடாது என்பதற்காக லட்சங்களை இவர்கள் கொட்டிக் கொண்டிருக்க... நாமெல்லாம் மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயக விதிமுறையோ?!
http://ibnlive.in.com/news/montek-justifies-toilets-upgrade-for-rs-35-lakh/264631-3.html 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More