Thursday, October 28, 2010

கட்டுமான பொருள்கள் விலை ஏற்றம் ஏன் ?

ரமேஷ் நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர். இருபதுகளின் மத்தியில் வயது. தற்போது சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சொல்லிக் கொள்ளும்படியான வருமானம். ரமேஷுக்கு ஒரு கனவு உண்டு. திருமணத்துக்கு முன்பாக, ஊரில் சொந்தமாக ஒரு வீடு கட்டிவிட வேண்டும்.

கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரிடமும் ஆலோசனை கேட்டு, தனது கனவு வீட்டுக்கான 'பட்ஜெட்'டை நிர்ணயித்தார். குருவி மாதிரி சிறுக சிறுக பணத்தை சேமித்தார். இப்போது பணம் ரெடி. தனது கனவு வீட்டை ஊரில் கட்டவும் ஆரம்பித்தார். ஆசையோடு திட்டமிட்டு கட்ட ஆரம்பித்த வீடு, இன்று பாதியில் நிற்கிறது. பட்ஜெட் பற்றாக்குறை!

ஏன், ரமேஷ் 'நறுக்'கென்று திட்டமிட்டு போட்ட பட்ஜெட்டில் துண்டு விழுகிறது?

ஏனெனில், மூன்று மாதங்களுக்கு முன்பு தோராயமாக, சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.160, கட்டுமானக் கம்பி விலை (ஒரு டன்னுக்கு) ரூ.32000, ஜல்லி (ஒரு யூனிட்) ரூ.2000, செங்கல் (கல் ஒன்று) ரூ.3.50-க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. இன்றைய தேதியில் இப்பொருட்களின் விலை முறையே ரூ.290, ரூ.39000, ரூ.2500, ரூ.5 என்று அதிரடியாக விலை ஏறியிருக்கிறது. (ஊருக்கு ஊர், பொருளுக்கு பொருள் விலை வேறுபடலாம்)

"வங்கிக் கடனுக்காக பேயா அலைஞ்சுக்கிட்டிருக்கேன் சார். பின்னே பத்து லட்சரூபாய்க்கு எஸ்டிமேட் போட்டு வேலையை ஆரம்பிச்சா, முடிக்கும்போது பண்ணிரெண்டு லட்சம் ஆகுமுன்னா, என்னை மாதிரி நடுத்தரவர்க்கம் என்னதான் சார் செய்யும்?" என்கிறார் ரமேஷ் வருத்தமாக.

நடுத்தர வர்க்கத்துக்கு வீடு என்பது கனவு. வீடு கட்டும் பலரும் சந்திக்கிற நெருக்கடி என்னவென்றால் கட்டுமானப் பணியாளர்களின் ஊதியம். தமிழகத்தில் சராசரியாக, ஒரு நாளைக்கு கொத்தனாருக்கு/மேஸ்திரிக்கு ரூ.350 முதல் 400, சித்தாள் கூலி பெண்களுக்கு ரூ.100 முதல் 120 – ஆண்களுக்கு ரூ.150 வரை வழங்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒரு வீடு உருவாவதில் கட்டுமானப் பொருட்களின் விலைக்கு நிகராக தொழிலாளர் ஊதியமும் செலவாகிறது. உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வரும் காரணத்தால், கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் பணிபுரிய ஒப்புக் கொள்கிறார்கள். தேவைப்படும் நேரத்தில் வேலைக்கும் அவர்களால் வரமுடிவதில்லை. இப்படிப்பட்ட சிக்கலான சூழலில் கட்டுமானப் பொருட்களின் 'திடீர்' விலை உயர்வு நடுத்தர வர்க்கத்துக்கு சொந்த வீடு என்பது கனவில் மட்டுமே தோன்றக்கூடிய ஒரு காட்சிப் பொருளாகி விடும்.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டில், கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் 47 இலட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் ஐம்பது சதவிகிதப் பணிகள் சிமெண்டைச் சார்ந்தது. கட்டுமானப் பொருட்களின் விலை இதுபோல விண்ணுக்கு உயர்ந்து கொண்டிருந்தால், அரசு திட்டமிட்ட அளவில் பாதிகூட நாட்டின் உள்கட்டமைப்பில் வளர்ச்சி பெறாது.

அண்டைமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் இந்த விலையேற்றம் அதிகமாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சராசரியாக 20 சதவிகிதம் கூடுதல் விலை கொடுத்து கட்டுமானப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது.

செந்தில்குமார், சென்னைப் புறநகரில் 'பில்டிங் காண்ட்ராக்ட்' தொழில் செய்து வருகிறார். இவரது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நடுத்தரவர்க்கத்தினரே. சிறியளவிலான அப்பார்ட்மெண்டுகளையும், தனிவீடுகளையும் கட்டித்தரும் ஒப்பந்தக்காரர் இவர்.

"வீடு கட்ட ஆரம்பிக்கும்போது வாடிக்கையாளரோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். குறிப்பிட்ட காலக்கெடுவில், குறிப்பிட்ட பணத்துக்கு வீட்டை முடித்துக் கொடுத்தாக வேண்டும். கட்டுமானப் பொருள் வாங்குவது, தொழிலாளர் கூலியெல்லாம் கணக்கு போட்டு ஓரளவு நியாயமான லாபம் வரும் வகையில் அந்த ஒப்பந்தம் இருக்கும்.

திடீரென்று இதுபோல விலை ஏறினால், எங்களைப் போன்ற சிறிய ஒப்பந்ததாரர்கள் நஷ்டத்துக்குதான் வேலை பார்க்க வேண்டும். திடீரென்று விலை ஏறிவிட்டது என்று சொல்லி, ஒப்பந்தத்தில் இருக்கும் பணத்தைவிட அதிகமாகவா வீட்டுச் சொந்தக்காரரிடம் கேட்கமுடியும்? கேட்டாலும் கொடுத்துவிடுவார்களா?

பெரிய வேலை எடுத்துச் செய்யும் காண்ட்ராக்டர்களுக்கு வேண்டுமானால் விலையேற்றத்தால் லாபத்தில் கொஞ்சம் சதவிகிதம் குறையும். எங்களைப் போன்றவர்களுக்கு கைகாசை போட்டு வீட்டை முடித்துத் தருவதைத் தவிர வேறுவழியில்லை. ஏன் தான் இதுபோல தாறுமாறாக ஏறித் தொலைக்கிறதோ தெரியவில்லை" என்கிறார் செந்தில்குமார்.

ஏனிந்த 'திடீர்' விலை உயர்வு?

செந்தில் குமாரை போலவே யாருக்கும் சரியான விடை தெரியவில்லை. பொதுமக்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து வரும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை' நோக்கி கைகாட்டுகிறார்கள். நடைபெறும் நிதியாண்டில் 1800 கோடி ரூபாய் செலவில் மூன்று லட்சம் குடிசை வீடுகள் கான்க்ரீட் இல்லங்களாக, அரசு மானியத்தில் உருவாகி வருகிறது. ஒரு இல்லத்துக்கு ரூ.60,000 கட்டுமானப் பொருட்கள் செலவுக்காக அரசால் வழங்கப்படும். அதைக்கொண்டு குடிசைவீட்டுக்காரர் தன் இல்லத்தை 'எப்படியோ' கட்டிமுடித்துக் கொள்ள வேண்டியதுதான். பெரும்பாலானோர் இத்திட்டத்தில் கூலிக்கு ஆள் வைக்காமல், தாங்களாகவே வீட்டை கட்டிமுடித்துக் கொள்கிறார்கள்.

பெரிய எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் சுமார் 1800 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பொருட்கள் வாங்கப்படும்போது தட்டுப்பாடு ஏற்படுவது சகஜம்தான். தட்டுப்பாட்டின் எதிர்வினை என்பது விலையேற்றம் என்பது பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஆனால், 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' விலையேற்றத்துக்கான ஒரு சிறு காரணிதானே தவிர, அதுமட்டுமே காரணமல்ல.

பெட்ரோல்-டீசல் விலை மழைக்கால பருவநிலை மாதிரி அடிக்கடி மாறிக்கொண்டே (99 சதவிகித நேரங்களில் விலையேறிக்கொண்டே) இருப்பதும் ஒரு காரணம். எந்த ஒரு தொழிலுமே போக்குவரத்தை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது. சிமெண்ட், கல், செங்கல், ஜல்லி என்று எல்லாப் பொருட்களுமே உற்பத்தியாகும் இடத்திலிருந்து, மொத்த விற்பனையாளருக்கு செல்லும். அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்களுக்கு, பின்னர் அவர்களிடமிருந்து கட்டுமானம் நடக்கும் இடத்துக்கு என்று மாறிக்கொண்டேயிருக்கும். எனவே இத்தொழிலில் போக்குவரத்துக்கு தவிர்க்கவியலா இடம் இருக்கிறது. போக்குவரத்துக்கு பெரும்பாலும் லாரி பயன்படுத்தப் படுகிறது. எனவே நிலையில்லா பெட்ரோல்-டீசல் விலை நிலவரமும் விலையேற்றத்துக்கு இன்னுமொரு காரணம். இதுபோல சிறு சிறு காரணங்கள் ஏராளம். அவற்றில் பலவும் நியாயமானவையும் கூட.

முக்கியமான இன்னொரு காரணம் உண்டு.

இந்த 'பகீர்' விலையேற்றத்துக்கு சிமெண்ட் நிறுவனங்களே முழுக்க முழுக்க காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இந்திய கட்டிட வல்லுனர் சங்கத்தினர்.

இந்த சங்கத்தின் தென்னக மையத்தின் தலைவர் மு.மோகன் சொல்கிறார்.

"சிமெண்ட் விலை வரலாறு காணாத விதத்தில் 10 நாட்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதையடுத்தே மற்ற கட்டுமானப் பொருட்களும் கூடவே கொஞ்சமாக விலையை கூட்டிக் கொண்டன. இதற்கு காரணம் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டாக லாபக்கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

கட்டமைப்பு வசதிகள் பெருகிவரும் சூழலில், வேண்டுமென்றே தட்டுப்பாட்டை உருவாக்கி லாபத்தை அதிகப்படுத்துகிறார்கள். சிமெண்டுக்கான மூலப்பொருளை அரசுதான் அவர்களுக்கு குறைந்த விலைக்கு தருகிறது. அரசின் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை கொண்டு உற்பத்தி செய்பவர்கள், விலையேற்றத்துக்கு அரசிடம் அனுமதி பெறுவதேயில்லை.

எனவே சிமெண்டை அத்தியாவசியப் பொருளாக அரசு அறிவித்து, விலை என்னவென்று அரசே நிர்ணயிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறோம்" என்று முடித்துக் கொண்டார்

வடமாநிலங்களில் கடுமையான மழை. தென்மாநிலங்களிலும் ஓரளவிற்கு மழை. எனவே நாட்டில் சிமெண்டின் பயன்பாடு தற்போது குறைவாகவே இருக்கிறது. சிமெண்ட் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையும் உயரவில்லை. ஆயினும் சிமெண்டின் விலை இருமடங்காக உயர்கிறது என்பதை காணும்போது மோகனின் பேச்சில் இருக்கும் நியாயம் புரிகிறது. (சிமெண்ட் விலை நியாயமாக என்ன இருக்க வேண்டுமென்பதை பெட்டிச் செய்தியில் காண்க)

ஏற்கனவே மழைக்காலம். இந்த லட்சணத்தில் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தால் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழப்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் என்பது செயற்கையானது – சில நிறுவனங்களின் லாபக்கணக்குக்காக ஏற்படுத்தப்படுகிறது - என்றால் அது கடுமையாக மக்களை பாதிக்கும் ஒரு செயல். Lime Stone என்பது நாட்டின் கனிமவளம். இதை மிகக்குறைந்த மதிப்புக்கு அரசிடமிருந்து பெற்று சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருளை மட்டும் பன்மடங்கு விலைக்கு மக்களுக்கு விற்பது நியாயமல்ல.

தொழிற்சாலை அமைக்கக் கோரும்போது சிமெண்ட் நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட உற்பத்திறன் என்ன? அந்த உற்பத்தித் திறன் எல்லா நேரத்திலும் செயல்படுத்தப்படுகிறதா போன்ற விஷயங்களை அரசு கண்காணிக்க வேண்டும். போலியான தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் கட்டிட வல்லுனர் சங்கம் கோருவதைப் போல சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து, அரசே விலை நிர்ணயம் செய்ய முன்வரவேண்டும்.

இல்லையேல், எத்தனை 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்' கொண்டுவந்தாலும் வீடு என்பது பலருக்கும் கனவில் மட்டுமே சாத்தியமாகும் திட்டமாக போய்விடும்.


எக்ஸ்ட்ரா மேட்டர் :

சிமெண்ட் (டன் ஒன்றுக்கு) உற்பத்திச் செலவு (இலாபம் உட்பட) - 1275.00

VAT 12.5%- 159.00

சிமெண்ட் மீதான சுங்கவரி (தீர்வை உட்பட) - 408.00

லைம் ஸ்டோன் மீதான ராயல்டி மற்றும் தீர்வை - 69.00

பவர் டாரிஃப் - 22.00

மற்ற பொருட்களுக்கான விற்பனை வரி (Stores Spare, rawmaterials etc.)- 27.00

சுங்கவரி – Stores & Spares - 23.00

சேவைவரி, Sundries etc. - 5.00

பேக்கிங் செலவு - 106.00

போக்குவரத்து - 700.00

மொத்தம் (ஒரு டன்னுக்கு) - 2794.00

ஒரு டன் = 20 மூட்டை

எனவே ஒரு மூட்டை சிமெண்ட் விற்கப்பட வேண்டிய விலை ரூ.140 மட்டுமே. ரூ.290க்கு விற்கப்படுகிறது என்றால் மீதி 150 ரூபாய்க்கு சிமெண்ட் நிறுவனங்கள் என்ன கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More